சென்னை முழுவதும் சுற்ற ஒரே டிக்கெட்! – பஸ், மெட்ரோ, எலக்ட்ரிக் ரயில் எதிலும் பயணிக்கலாம்!

சென்னையில் அரசுப் பேருந்து, மெட்ரோ, எலக்ட்ரிக் இரயிலில் பயணிப்பதற்கு ஒரே டிக்கெட் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான மக்கள் தினசரி போக்குவரத்து அரசுப் பேருந்து, எலக்ட்ரிக் ரயில், மெட்ரோ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களுக்கு செல்ல நேரடி சேவை இல்லாத காரணத்தால் நாம் இரண்டு சேவைகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
உதாரணமாக தாம்பரத்தில் இருந்து வளசரவாக்கம் செல்ல அரசுப் பேருந்து சேவை மிகவும் குறைவே. இதற்கு நாம் கிண்டி வரை எலக்ட்ரிக் இரயிலில் பயணித்து அங்கிருந்து வளசரவாக்கத்திற்கு அரசு பேருந்தில் செல்ல வேண்டும். அதே போல கிண்டியில் இருந்து குன்றத்தூர் செல்வதற்கு பல்லாவரத்தில் இறங்கி மாற வேண்டும். பேருந்தில் ஏறியவுடன் நடத்துநர் உங்களிடம் வந்து பணத்தை பெற்று டிக்கெட் கொடுப்பார். ஆனால் எலக்ட்ரிக் இரயிலில் டிக்கெட் பெற நாம் வரிசையில் காத்திருக்க வேண்டும் அல்லது அதற்கான ஆன்லைன் செயலில் டிக்கெட் எடுக்கும் முறை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் நேர விரயத்தை குறைக்கும் பொருட்டு மூன்று விதமான போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட் திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் ஏறக்குறைய 90 விழுக்காடு முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இத்திட்டமானது வரும் ஜூன் 2ஆம் வாரத்தில் அமலுக்கு வர உள்ளது. மெட்ரோவில் பயணிப்பதற்கு ரீசார்ஜ் கார்டு இருப்பதை போல இத்திட்டத்திற்கும் ரீசார்ஜ் கார்டு அல்லது ஸ்கேன் கார்டு கொடுக்கப்படலாம். குறிப்பிட்ட தொகைக்கு நாம் ரீசார்ஜ் செய்து சென்னை முழுவதும் பயணிக்கலாம்.மெட்ரோ மற்றும் எலக்ட்ரிக் இரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம். அதே போல பேருந்துகளில் நடத்துநரிடம் உள்ள ஸ்கேன் கருவியில் இதை காண்பித்து பயணிக்கும் இடத்தை தெரிவித்து எளிதாக பயணிக்கலாம். இதனால் டிக்கெட் கொடுக்கும் வேலை மிச்சமாகும்.
ஏற்கெனவே மாதாந்திர பாஸ் அல்லது வருடாந்திர பாஸ் பயன்படுத்துவோர் இத்திட்டத்தினால் குழப்பமடைய தேவையில்லை. மூன்று சேவைகளையும் பயன்படுத்தும் நபர்களுக்கு ஒரே டிக்கெட் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களுக்கு சில பயிற்சிகள் கொடுக்கப்படும். இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் போக்குவரத்து நிலையங்களில் போக்குவரத்து கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே டிக்கெட் திட்டம் 2015ஆம் ஆண்டிலேயே அமலுக்கு வர வேண்டிய திட்டமாகும்.
இதுபோன்ற தகவல் நிறைந்த கட்டுரைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
